Home தலைப்பு செய்தி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

புதுடெல்லி: ஜூன் 17-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரேடியாகச் சரிந்து விழுந்துள்ளது.வெறும் நான்கே நாட்களில் 16 சதவீதம் வரை விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தமே இந்த அதிரடி விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்வதேச சந்தையில் பிரதானமாக விளங்கும் ‘ப்ரெண்ட்’ கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 80 டாலருக்கும் கீழே, அதாவது 79 முதல் 80 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ எண்ணெய் விலையும் பேரலுக்கு 77 டாலர் என்ற அளவுக்குக் கடுமையாகச் சரிந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வந்த போர் பதற்றத்தால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, பேரல் 126 டாலரைத் தாண்டியது. ஆனால், இப்போது இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை உறுதி செய்த சில மணி நேரங்களிலேயே, உலக சந்தையில் விலை 83 டாலராகக் குறைந்து, தற்போது 80 டாலருக்கும் கீழே சரிந்து சறுக்கியுள்ளது.
ஊடகங்களுக்குக் கிடைத்துள்ள ஒப்பந்த விபரங்களின்படி, லெபனானில் தற்போதுள்ள போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படும். எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறுப்பு ஈரானிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஈரானில் இருந்து உலக சந்தைக்குக் கூடுதல் எண்ணெய் விநியோகமாகும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு இந்த விலை வீழ்ச்சி ஒரு மாபெரும் நிம்மதியைத் தந்துள்ளது. ஏனெனில், இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறையும். இது நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சமாளிக்கப் பெரிதும் உதவும். கடந்த 3 மாதங்களில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட குளறுபடிகளால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி முறை மாறியிருந்தது. வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் ஓமன் நாட்டில் இருந்து இந்தியா செய்துகொண்ட எண்ணெய் இறக்குமதி மதிப்பு 305 சதவீதத்திற்கும் மேலாக அதிரடி மாற்றத்தைக் கண்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, 2027 நிதி ஆண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது. “தற்போதைக்கு விநியோகத் தடை பயம் நீங்கியிருந்தாலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சந்தை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். குறுகிய காலத்தில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரும்” என்கிறார் க்ரிசில் இண்டெலிஜென்ஸ் இயக்குநர் செஹுல் பட்.
2027 நிதியாண்டின் முதல் பாதியில் எண்ணெய் விலை சராசரியாக 90 டாலராக இருக்கலாம். ஆனால், இரண்டாம் பாதியில் விலை கணிசமாகச் சரிந்து, நிதியாண்டின் இறுதியில் 70 டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உடனடியாகக் குறையாது என்று பொருளாதார அறிஞர் மாதவி அரோரா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் உள்ள குழப்பங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பழைய நஷ்டங்களைச் சரிசெய்வது போன்ற காரணங்களால், இந்திய நுகர்வோருக்கு இந்த விலை குறைப்பின் பலன் உடனடியாகக் கிடைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.