தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட.. 200 பேர் டெல்லி வருகின்றனர்

வாஷிங்டன்:நவம்பர் 19-
அமெரிக்காவிலிருந்து, கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இந்தியா வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முறையான ஆவணங்கள் இன்றி, தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்கா அரசு தொடர்ந்து வெளியேற்றி வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறை கைதிகளை போல கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியிருக்கிறது. இதில் 197 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள். மீதி உள்ள மூவரில், ஒருவர் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய். மற்ற இருவர் பஞ்சாப்பில் தேடப்படும் குற்றவாளிகள் ஆவார்கள். இவர்கள் 200 பேரையும் ஏற்றி வரும் விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை காலை 10 மணிக்கு வந்தடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற முக்கிய வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2022 ஆண்டு ஏப்ரல் மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்.
பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு அவர் தப்பினார். ரஷ்ய போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா இடையே அவர் பயணித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்தே என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு தளங்கள் வழியாக தனது கும்பலை அன்மோல் தொடர்ந்து இயக்கியதாக புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அன்மோல் இந்தியா வந்தவுடன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பாபா சித்திக் மகன் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் அன்மோலுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அன்மோல் வந்தடைந்ததும், எந்த அமைப்பு முதலில் அவரை காவலில் எடுக்கும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். NIA, கும்பல் தொடர்பான மாநிலங்களுக்கிடையேயான பயங்கரவாத வலைப்பின்னல்களை விசாரித்து வருவதால், அதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.