Home மாவட்டங்கள் பெங்களூர் தாய் மடியில் குழந்தை மீது இளநீர் விழுந்து பலி

தாய் மடியில் குழந்தை மீது இளநீர் விழுந்து பலி

உடுப்பி: ஜூன் 11-
தாய் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை மீது, எதிர்பாராதவிதமாகத் தேங்காய் விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் பிரம்மாவர் தாலுகா சாந்தாரு ஹெரஞ்சாலு கிராமத்தில் நடந்துள்ளது.
ஹெரஞ்சாலு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் – சுசித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் தக்‌ஷா (வயது 1½). நேற்று தாய் சுசித்ரா தனது குழந்தையை மடியில் கிடத்தி, அங்குள்ள தென்னை மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று திடீரென உதிர்ந்து நேராகக் குழந்தையின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிஞ்சுப் பாலகனின் இந்தத் திடீர் மரணம் அந்த கிராமத்தையே சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது. இச்சம்பவம் குறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.