
வாஷிங்டன், ஏப்ரல் 24- அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலன் பதவி நீக்கத்தை தொடர்ந்து, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் டிரம்ப் வகை போர்க்கப்பல்கள் உருவாக்கும் திட்டத்தை பென்டகன் விரைவுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கப்பல் கட்டும் சீர்திருத்தங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கையில் ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத்துடன் கருத்து வேறுபாடு காரணமாகவே ஜான் பெலன் பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சர் ஹெக்சேத் விரைவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சீனா தனது கடற்படை பலத்தை மென்மேலும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கு போட்டியாக உலகின் அதிநவீன திறன்களுடன் ஆளில்லாமல் தானாக இயங்கக் கூடிய டிரம்ப் வகை போர்க்கப்பல்களை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக லேசர் ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் இடம்பெறும் யுஎஸ்எஸ் டிபையன்ட் போர்க்கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு கப்பல் மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடி செலவில் உள்நாட்டில் கட்டப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மொத்தம் 3 அதிநவீன கப்பல்கள் சுமார் ரூ.4 லட்சம் கோடியில் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த ஜான் பெலன் நீக்கப்பட்டதால், இனி டிரம்ப் வகை கப்பல்களை தயாரிக்கும் திட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















