
டெஹ்ரான், ஏப்ரல் 24- உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் இந்தியாவை நோக்கி வந்த இரண்டு வணிகக் கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாகச் சிறைபிடித்தது. இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதிரடித் தாக்குதலும் சிறைபிடிப்பும் ஈரான் வெளியிட்டுள்ள வீடியோவில், ஈரான் நாட்டு கொடி பொருத்தப்பட்ட அதிவேகப் படகுகள் கடலில் கப்பல்களைச் சூழ்ந்து செல்வது தெளிவாகத் தெரிகிறது. முகமூடி அணிந்த ஈரான் வீரர்கள், கைகளில் துப்பாக்கிகளுடன் ஏணிகள் மூலம் கப்பலில் ஏறி அதைக் கைப்பற்றுகின்றனர். ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய ‘நூர் நியூஸ்’ (Nour News) நிறுவனம் இது தொடர்பாகத் வெளியிட்ட செய்தியில், “எபாமினோண்டாஸ்” (Epaminondas) மற்றும் “எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா” (MSC Francesca) ஆகிய இரண்டு கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ‘எபாமினோண்டாஸ்’ கப்பல் ஈரான் ராணுவத்தின் எச்சரிக்கையைப் புறக்கணித்ததால், அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னரே அது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் “யூஃபோரியா” (Euphoria) என்ற மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ராணுவத்தின் விளக்கம் இந்தக் கப்பல்கள் சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் சென்ற இரண்டு கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதில் ‘எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா’ கப்பல் சீயோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) தொடர்புடையது. மற்றொரு கப்பலான ‘எபாமினோண்டாஸ்’, கப்பல் போக்குவரத்து சமிக்ஞைகளை (Navigation systems) தவறாகக் கையாண்டு கடல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியது.” ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பே எங்களின் ‘சிவப்புக்கோடு’ (Red line) என்றும், இந்தப் பகுதியில் ஒழுங்குமுறையைச் சீர்குலைக்கும் எந்தச் செயலையும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. டிரம்பின் போர்நிறுத்த அறிவிப்பும் ஈரானின் பதிலும் இந்தக் கடல்வழி மோதல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிக போர்நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்துள்ளது. சிஎன்பிசி (CNBC) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டிரம்ப், “ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு முன்வந்தால், அந்த நாடு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தைச் சந்திக்கும். அவர்கள் நிதானமாகவும் பகுத்தறிவுடனும் செயல்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், டிரம்பின் இந்த அழைப்பை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் கடுமையாகச் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் அச்சுறுத்தல்களும் தான் பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாக உள்ளன. அமெரிக்காவின் செயல்பாடு முரணாகவும் நயவஞ்சகமாகவும் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.




















