சென்னை:டிச. 5: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது 8வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை. இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய “அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!” எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி #உயிராய்உணர்வாய்அம்மா என்ற ஹேஷ்டேக்கில் அதிமுகவினர் கருத்துகளைப் பதிவிட்டு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் தனித்தனியே தமது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையொட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.