
சென்னை: பிப்ரவரி 23-
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. ஆனால், இந்த முறை “ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என கட்சி நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் போர்க்கொடி தூக்கினர். இதற்கு திமுக தரப்பிலிருந்தும் பதிலடிகள் வர, கூட்டணிக்குள் விரிசல் விழுமோ என்ற பதற்றம் நிலவியது.
இந்தச் சூழலில் சென்னை வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது; ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல” என விளக்கமளித்தார்.
இருப்பினும், ராகுல் காந்திக்கு தெரிந்தே இந்த சர்ச்சையைக் கிளப்புகிறார்களோ என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு இருந்தது. இதைத் தொடர்ந்து வேணுகோபால் பலமுறை முயன்றும், ஸ்டாலினுடனான சந்திப்பு தள்ளிப்போய்க் கொண்டே போனது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்த கே.சி.வேணுகோபால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இதில் கனிமொழி எம்.பி. மற்றும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். சந்திப்பின்போது ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், முதல்வர் இல்லத்தில் தயார் செய்யப்பட்ட உணவை அருந்தியபடியே தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ், திமுக கட்சிகளின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது: மாணிக்கம் தாகூர் எம்.பி., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் விமர்சனங்கள் எல்லை மீறிச் செல்வதாகவும், இவ்வளவு கசப்புகளுக்குப் பிறகு கூட்டணியைத் தொடர வேண்டுமா என்றும் அமைச்சர்கள் பலரே முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஸ்டாலின், ‘தேர்தல் நேரத்தில் நமக்குச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல முட்டுக்கட்டைகள் வர வாய்ப்புள்ளது.
அதை நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசுவதற்கு காங்கிரஸின் பலம் நமக்கு அவசியம் தேவை எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் நேரடியாக சோனியா காந்தியை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். இதையடுத்து ராகுலை அழைத்துப் பேசிய சோனியா, ‘திமுக நமக்கு இக்கட்டான பல நேரங்களில் தோள் கொடுத்த கட்சி, அவர்களை இழப்பது சரியான முடிவாக இருக்காது’ என கூறியிருக்கிறார்.

















