
டெல்லி: ஜனவரி 16-
திருவள்ளுவர் தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். மேலும், திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வழக்கமாக வெள்ளை உடையில் இருக்கும் திருவள்ளுவரைதான் தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்பினர், திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்து அவர் இந்து என்று அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெற்றியில் பட்டை, குங்குமம் மற்றும் கழுத்தில் ருத்ராட்ச ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் திருவள்ளுவரின் படத்தை பகிர்ந்து, திருவள்ளுவர் தின வாழ்த்தை அவர் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது, “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.














