ஹைதராபாத்: டிசம்பர் 3 –
ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்எல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய 3 வழித்தடங்களில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 5 லட்சம் பேர் ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர்.இந்த நிலையில் பயணிகள் அதிலும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ஹைதாபாத் மெட்ரோ 20 திருநங்கைகளை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து பாதுகாப்பு பணியில் இணைத்துக்கொண்டுள்ளது.
இதன் மூலம், திருநங்கைகளுக்கு சமூக அதிகாரமளித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பும் மேம்படும் என்று ஹைதராபாத் மெட்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எச்எம்ஆர்எல் கூறுகையில், “மொத்த பயணிகளில் 30% பேர் பெண்கள். எனவே, அவர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு மிக முக்கியமான முன்னுரிமை தந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு சமமான வாய்ப்பு, கண்ணியமான வாழ்கை கிடைப்பதற்கு தெலங்கானா அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு உதவி போக்குவரத்து மார்ஷல்ஸ் பணிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டது.















