
திருமலை: மே 24-
திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 22-ம் தேதி சுவாமியை ஒரே நாளில் 72,579 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 21-ம் தேதி 80,964 பேரும், 20-ம் தேதி 76 ஆயிரம் பேரும், 19-ம் தேதி 79,003 பேரும், கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 84,561 பேரும் சுவாமியை தரிசித்துள்ளனர். நேற்று 34,067 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.3.74 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
சர்வ தரிசனம் செய்ய தற்போது 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். மேலும் இன்று சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.