திருப்பதியில் நாளை தரிசன முறையில் மாற்றம்

திருப்பதி, மார்ச் 24- திருப்பதியில் மார்ச் 25 ஆம் தேதி, மார்ச் 30ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. வார நாட்களில் 65 ஆயிரத்திற்கு மேலான பக்தர்களும் வார இறுதி நாட்களில் 80 ஆயிரத்திற்கு மேலானவர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி திருப்பதியில் தரிசன முறையில் செய்யப்படவுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம தெலுங்கு யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகாதியையொட்டி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் மார்ச் 25ஆம் தேதி நடைபெறுகிறது. அதாவது பாரம்பரிய முறைப்படி கோவிலை சுத்தம் செய்யும் நடைமுறையாகும். இதற்காக நாளை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையில் 4 மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது. அது போல் 25-ஆம் தேதியான நாளை குறிப்பிட்ட புரோட்டோகாலை தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதற்காக இன்று முதலே எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அது போல் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் மார்ச் 25ஆம் தேதி அஷ்டதலபாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அது போல் யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்திலும் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 25 மற்றும் 30ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்திற்கு விஐபி புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்