திருப்பதி லட்டு.. கலப்பட நெய் ரசாயனம் சப்ளை செய்தவர் கைது

திருப்பதி: நவ .8-
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை கைது செய்தது சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு.
கலப்பட நெய்க்காக அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் தயாரிக்கப் பயன்படுத்திய குற்றத்திற்காக அஜய் குமார் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுக்கு என்றே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சந்திரபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அடுத்த நாளே ஒரு ஆய்வக பரிசோதனை அறிக்கை வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் அனுப்பியதாக திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் இருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும் தகவல் வெளியானது.திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரூர்கியில் உள்ள பகவான்பூரில் அமைந்துள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். திருப்பதி லட்டு தயாரிக்க உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள நெய் நிறுவனம் 70,000 கிலோ நெய் விநியோகம் செய்துள்ளது. இந்நிலையில், அங்கும் ஆய்வு நடைபெற்றது.