திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்

சென்னை: டிசம்பர் 12-
திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார்.
திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், தீபம் ஏற்றவிடாமல் தி.மு.க., அரசும், காவல் துறையும் தடுத்துள்ளது.
கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த அதன் தலைவர் மோகன் பாகவத்திடம், இந்த பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது, தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின்னர், திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் பிரச்னையில், ஹிந்து அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்., உதவியை நாடினால் பரிசீலிப்போம்,” என்றார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஹிந்து கோவிலில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய, இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் ‘நோட்டீஸ்’ கொடுத்ததையும், பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோர் சபாநாயகரை நேரில் சந்தித்ததையும், ஆர்.எஸ்.எஸ்., சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., கட்சிகளின் ஹிந்து விரோதப் போக்கை, நாடு முழுதும் அம்பலப்படுத்த ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்டுள்ளது. நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; நோட்டீஸில் கையெழுத்திட்ட இண்டி கூட்டணி எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிடுவது என, பலகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.