திருவண்ணாமலை மகாதீபம். பக்தர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம் செயலி

திருவண்ணாமலை: டிசம்பர் 3
திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் என்ற புதிய செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பக்தர்கள் பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கூட்டம் அதிகமிருக்கும் இடங்கள், மருத்துவ முகாம், கூகுள் மேப், 14 கிமீ கொண்ட கிரிவலப் பாதை உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிய முடியும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ஏற்றப்பட்ட பரணி தீபத்தை காணவே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து மகா தீபம் மாலையில் 2,668 உயரத்தில் ஏற்றப்பட உள்ளது.
இந்த மகா தீபத்தை காண்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதனால் அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்புக்காக அவர்களின் கைகளில் ஒரு ஸ்டாம்ப் வாட்ச் கட்டப்படுகிறது. அதில் குழந்தை மற்றும் பெற்றோர் விவரங்களை போலீசார் எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டிவிடுகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலியின் மூலமாக கோயில் வரைபடம், கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகள், தற்காலிக பேருந்து நிலையங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். அதேபோல் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் வரும் மக்களுக்கான பார்க்கிங் வசதி எங்கு உள்ளது, மருத்துவ முகாம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது, ஆம்புலன்ஸ் வசதி எங்கெலாம் உள்ளது என்பனவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தண்ணீர் வசதி, கிரிவலப் பாதையான 14 கிமீ தூரம் வரை செய்யப்பட்டுள்ள வசதிகளையும் தெரிந்து கொள்ள முடியும்.