
சென்னை: ஆக.28-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக நேற்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.29ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.30 முதல் செப்.2ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (28-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.