“தீவிரவாதத்தை நடத்துவதே ஷெரீப் அரசு தான் – பாகிஸ்தான் முதல்வர்

இஸ்லாமாபாத்:நவம்பர் 19-
பாகிஸ்தான் மறைமுகமாகத் தீவிரவாதத்திற்குப் பல காலமாகவே ஆதரவளித்து வருவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா முதல்வர் ஒருவரே, அங்குள்ள ஷெரீப் அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக சாடியுள்ளார். அரசே போலியான தீவிரவாதத் தாக்குதல்களையும் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா என்ற கிராமத்தில் தாக்குதல்கள் அதிகமாகவே இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாகாணத்தில், முதல்வராக இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த சொஹைல் அப்ரிடி என்பவர் இருக்கிறார்.
அம்பலப்படுத்திய அப்ரிடி கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி, அங்குள்ள மத்திய ஷெரீப் அரசு மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். பாகிஸ்தான் திட்டமிட்டு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதாகவும், தனது மாகாணத்தில் அமைதியை நாசப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத கொள்கையை அம்பலப்படுத்தும் வகையில் அப்ரிடி பேச்சு இருந்தது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் “போலி” பயங்கரவாத தாக்குதல்கள் அரசே நடத்துவதாகவும் அவர் சாடினார். பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டுவதாகவும், அதே நேரத்தில் கைபர் பிராந்தியத்தில் அமைதியைக் குலைப்பதாகவும் அப்ரிடி குற்றம் சாட்டினார். இது அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்படும் பயங்கரவாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவ தாக்குதல்கள் இந்த கைபர் பக்துன்க்வாவின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மத்ரே தாரா என்ற கிராமத்தில் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதில் சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் கொன்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைச் சுட்டிக்காட்டிய அப்ரிடி, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு பாகிஸ்தான் ஆயுதப்படைகள், பொதுமக்களைக் குறிவைத்து வேண்டும் என்றே தாக்குதல் நடத்துவதாக அப்ரிடி குற்றம் சாட்டினார். இது போர்க் குற்றங்களுக்கு இணையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.