
சென்னை: ஆகஸ்ட் 24- குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தங்களின் வேட்பாளர்களை களமிறக்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று தமிழ்நாடு வருகை தரவுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்களை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு பாஜக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியை ஈர்ப்பதற்காக ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி முன்னிறுத்தியுள்ளது. இரண்டு பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். பிரதான வேட்பாளர்களான இவர்கள் இருவரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் மாநிலம் வாரியாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளனர். அதன்படி சுதர்சன் ரெட்டி இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தன் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை சென்னை வரும் சுதர்சன் ரெட்டி, இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளார். அப்போது சுதர்சன் ஸ்டாலினிடம் ஆதரவு கோரவுள்ளார். அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் தேநீர் விருந்து நடத்தவுள்ளார். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.