
இஸ்தான்புல்: மே 2 –
வெளிநாடுகளில் இருந்து பென்டானில், ஹெராயின், கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை முறியடிக்க இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” என்ற ரகசிய நடவடிக்கையைத் தொடங்கினர்.இதன்படி என்சிபி, மும்பை காவல் துறை, குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு, இன்டர்போல் உதவியுடன் சர்வதேச போதை கும்பல்களை வேட்டையாடும் பணியைத் தொடங்கியது.
முதல்கட்டமாக உள்நாடு, வெளிநாடுகளில் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” நடவடிக்கையின் போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சலீம் டோலா துருக்கியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்ய இன்டர்போல் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
துருக்கி பாதுகாப்புப் படையினரின் நீண்ட தேடலுக்குப் பிறகு இஸ்தான்புல் நகரில் சலீம் டோலா அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கடந்த 28-ம் தேதி இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட டோலா, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது: மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் டோங்ரி பகுதியை சேர்ந்த சலீம் டோலா, ஆரம்ப காலத்தில் மும்பை, டெல்லியில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அவருக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஏற்பட்டது.அதன்பிறகு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது பலமுறை மும்பை போலீஸிடம் அவர் பிடிபட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சலீம் டோலா தப்பியோடினார்.அவரை மே 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்பேரில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



















