
பெங்களூரு: ஜூன் 18-
கர்நாடக சட்ட மேலவையின் 7 இடங்களுக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 7-வது இடத்தைக் கைப்பற்றப்போவது யார் என்பதில் காங்கிரஸுக்கும், ஜே.டி.எஸ்.(மதச்சார்பற்ற ஜனதா தளம்) கட்சிக்கும் இடையே அனல் பறக்கும் போட்டி நிலவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தத் தேர்தலில் 7 இடங்களுக்கு 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் 7-வது இடத்தைப் பிடிக்க காங்கிரஸின் வினய் கார்த்திக்கும், பாஜக ஆதரவுடன் களம் இறங்கியுள்ள ஜே.டி.எஸ். கட்சியின் கோவிந்தராஜுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது இன்று மாலை வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
இந்தத் தேர்தலில் ‘கிராஸ் வோட்டிங்’ எனப்படும் கட்சி மாறி வாக்களிக்கும் பீதி நிலவியதால் காங்கிரஸ், பாஜக, ஜே.டி.எஸ். ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது எம்.எல்.ஏ.க்களைக் தக்க வைக்கப் போராடினார்கள். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதிகளில் (ரெசார்ட்) தங்க வைத்திருந்தன. இன்று காலை அங்கிருந்து அவர்கள் பேருந்துகள் மூலம் நேரடியாக சட்டமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்களித்தனர்.
இன்று காலை 9 மணிக்கு மேலவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தின் முதலாவது மாடியில் உள்ள அறை எண் 106-ல் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்தனர். வாக்களிப்பதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் அறையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக காலை உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கலந்துகொண்டு, கடைசி நேரத்தில் யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ரகசிய உத்தரவை வழங்கினார். காலை 11 மணிக்குள் ஆர். அசோக், விஜயேந்திரா, எஸ்.ஆர். விஸ்வநாத் உள்ளிட்ட பெரும்பாலான பாஜகவினர் வாக்களித்து முடித்தனர். பிடதி ரெசார்ட்டில் இருந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற வளாகத்தின் 3-வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் கூடினார்கள். அங்கு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஏ.ஐ.சி.சி. செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான எஸ்.டி. சோமசேகர் மற்றும் சிவராம் ஹெப்பார் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ. சோமசேகர் கூறுகையில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் நேற்று எங்களை அழைத்துப்பேசி ஆதரவு கேட்டார். எங்கள் தொகுதிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்களுக்கு நான் வாக்களித்துள்ளேன் என்றார்.
எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பார் கூறுகையில் எங்களை பாஜகவோ அல்லது ஜே.டி.எஸ்.ஸோ தொடர்பு கொள்ளவே இல்லை. காங்கிரஸ் தரப்பில் ஆதரவு கேட்டார்கள். நானும் சோமசேகரும் எங்கள் மனசாட்சிப்படி வாக்களித்துள்ளோம் என்றார்.
அதேநேரம், பாஜகவில் அதிருப்தியில் இருந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான பசனகவுடா பாட்டீல் யத்னால் மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் பாஜக வேட்பாளருக்கே வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்கள்: பி.கே. ஹரிபிரசாத், திப்பண்ணா கமகனூர், பி.வி. மோகன், சிவண்ணா மலவள்ளி மற்றும் வினய் கார்த்திக்.
பாஜக வேட்பாளர்கள்:லிங்கராஜ் பாட்டீல் மற்றும் ரகு கவுடில்யா.
ஜே.டி.எஸ். வேட்பாளர்: கோவிந்தராஜு.
7-வது இடத்தை பிடிக்கப்போவது காங்கிரஸா அல்லது ஜே.டி.எஸ்.-ஸா என்ற இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


















