தூக்கத்தை தொலைக்கும் பாகிஸ்தான் -ராஜ்நாத் சிங் அதிரடி

டெல்லி: நவம்பர் 24-
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து ஆகியவற்றால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் மாற்றம் வரலாம். சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவரின் இந்தக்கருத்து பாகிஸ்தானுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா பல அதிரடி முடிவுகளை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கும்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சிந்து -இந்தியா மறுபக்கம் இந்தியா – பாகிஸ்தான் இடையே முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1960 ஆம்அண்டு சிந்து நதி நர் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு அதிக இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் ராஜ்நாத் சிங் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிந்தி இந்துக்கள் குறித்து அத்வானி தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு சிந்த் மண்டலம் பாகிஸ்தானுக்கு சென்றது. இதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு சிந்து புனித அடையாளமாக உள்ளது.எல்லைகள் மாறலாம் சிந்து தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கலச்சார ரீதியாகவும், நாகரீக ரீதியாகவும் சிந்து எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். 1,000 வருடங்களுக்கு முன்பிருந்த முக்கியத்துவம் இப்போதும் தொடர்கிறது. நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நாளையே சிந்து மீண்டும் இந்தியா திரும்பவும் வாய்ப்புள்ளது. சிந்து நதியை புனிதமாக கருதும் மக்கள் எப்போதும் நம்மவர்களாக தான் இருப்பார்கள். எங்கிருந்தாலும் அவர்கள் நம்மவர்களாக மட்டும் தான் இருப்பார்கள்.” என்று கூறியுள்ளார். ராஜ்நாத்தின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி சிந்து இல்லாமல் இந்தியா பூர்த்தி அடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.