தென் மாவட்டங்களுக்கு பிஜேபி குறி

சென்னை: ஆக. 23-
சட்டசபைத் தேர்தலில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிகளவில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் 25 தொகுதிகளில் குறி வைத்து பாஜக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு வழக்கமாக கைகொடுக்கும் தென் மாவட்டங்களின் ஆதரவு, திமுக பக்கம் சாய்ந்தது. இதன் காரணமாகவே திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்கள் முழுமையாக அதிமுகவை கைவிட்டன. மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளில் பாஜக 2வது இடத்தை பிடித்தது.
அதேபோல் ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் 2வது இடத்தை பிடித்தனர். இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு பாஜக பக்கம் இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு ஓபிஎஸ் பாஜகவுடன் இருந்ததும் முக்கிய காரணமாகும். தற்போது ஓபிஎஸ் தரப்பை புறக்கணித்துவிட்டு பாஜக தனது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் தரப்பை பிரதமர் மோடியை சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் வேண்டுமென்றே புறக்கணித்து வெளியேற வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஓபிஎஸ் இடத்தில் நயினார் நாகேந்திரனை வைத்து பணியாற்ற பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப தென் மாவட்டங்களில் 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டியை அமைத்து நயினார் நாகேந்திரன் மாநாடு நடத்தி இருக்கிறார். இதற்கு பின்னணியில் பாஜக தென் மாவட்டங்களில் சுமார் 25 தொகுதிகளை குறி வைத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 2 முதல் 3 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற பாஜக திட்டமிட்டுள்ளது.