தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்

சிருங்கேரி, மே 13- இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து, கர்நாடகா மாநிலம், சிருங்கேரி அருகில் கிக்கா கிராமத்தில் ரிஷ்யசிருங்கர் கோவிலில் சகஸ்ர சண்டி யாகமும், மஹா ருத்ர யாகம் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது. கஷ்யப மகரிஷியின் புதல்வரான விபாண்டக மகரிஷி திரேதா யுகத்தில் சிருங்கேரியில் தவம் இயற்றினார். அதனை மெச்சி சிவபெருமான் மலஹானி கரேஸ்வரராக சுயம்பு லிங்க வடிவில் சிருங்கேரியில் அருள் புரிகிறார். விபாண்டக மகரிஷியின் தவப்பயனால் பிறந்த குழந்தையானது ஒரு சிறிய கொம்புடன் மான் உடம்பிலிருந்து பிறந்ததாலும், ரிஷி குமாரன் ஆகிற படியாலும் அவருக்கு ரிஷ்ய சிருங்கர் என பெயர் பெற்றார். ரோமபாதரின் பெண் சாந்தா என்பவரை ரிஷ்ய சிருங்கருக்கு மணம் முடிக்கப்பட்டது.ரிஷ்யசிருங்கர் பல காலம் சிருங்கேரிக்கு அருகிலுள்ள நரசிம்ம பர்வதம் எனும் இடத்தில் தவம் இயற்றினார். ரிஷ்யசிருங்கரும், கிக்கா கோவில் சிவலிங்கத்திலேயே ஐக்கியமாகி தற்போதும் சாந்தாம்பா சமேத ரிஷ்யசிருங்கேஸ்வரராக அருள் புரிந்து வருகிறார்.