
வாஷிங்டன்: டிசம்பர் 11-
அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காக போரைப் பயன்படுத்துகிறார் என்று மீண்டும் மீண்டும் கூறியதைத் தொடர்ந்து, ‘’உக்ரைன் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளது’ என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இரு நாடுகளுக்கிடையே அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் இன்னமும் மோதல் நீடிக்கிறது.இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019லேயே காலாவதியானது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளது; எனவே தேர்தல் தடைபட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் அமைதி திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.இதனால் அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீதான விமர்சனத்தை தீவிரப்படுத்தினார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் குறித்து யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக் கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும். அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத ஒரு கட்டத்திற்குச் செல்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.


















