தேவையில்லாமல் சீண்டிய பாகிஸ்தான் பவுலர்.. வட்டியும், முதலும் சேர்த்து கொடுத்த ஹசரங்கா

அபுதாபி, செப். 24- 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணி வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது, இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை விக்கெட் வீழ்த்திய பிறகு கிண்டலாக வழியனுப்பி வைக்க, அதற்கு ஹசரங்கா தனது பந்துவீச்சின் மூலம் வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தார். Next இந்தப் போட்டியின் போது, இலங்கை ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதின் கூக்ளி பந்தில் க்ளீன் போல்டானார். ஆனால், விக்கெட்டை வீழ்த்தியதோடு அவர் நிற்கவில்லை. ஹசரங்காவின் பிரத்யேகமான கொண்டாட்ட முறையை, அவரையே பார்த்துக் கிண்டலாகச் செய்து காட்டி வழியனுப்பி வைத்தார். அப்ராரின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் உடனடியாக பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அத்தியாயம் இத்துடன் முடியவில்லை. அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது பந்துவீச வந்த ஹசரங்கா, இதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தார். முதலில், ஃபக்கர் ஜமான் அடித்த பந்தை ஒற்றைக் கையில் அபாரமாகப் பிடித்து கேட்ச் செய்தார். அதன்பிறகு, சயிம் அயூப் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இந்த மூன்று முறையும், அப்ரார் அகமது தன்னை எப்படிக் கிண்டல் செய்தாரோ, அதேபோல அவரும் செய்து காட்டி, தக்க பதிலடி கொடுத்தார். களத்தில் நடந்த இந்த பனிப்போர், போட்டியின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சரிந்த இலங்கை: இந்த தனிநபர் மோதல்கள் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் இலங்கை அணி பேட்டிங்கில் பெரிதும் தடுமாறியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் மட்டும் தனியாளாகப் போராடி 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே இதற்கு முக்கிய காரணம். போட்டியின் இரண்டாவது பந்திலேயே குசல் மெண்டிஸையும், அடுத்த ஓவரில் பதும் நிசங்காவையும் வீழ்த்தி ஷஹீன் ஷா அப்ரிடி (3/28) இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். இந்த ஆரம்ப சரிவிலிருந்து இலங்கை அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. கேப்டன் சரித் அசலங்கா, குசல் பெரேரா, தசுன் ஷனகா என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், பாகிஸ்தான் அணிக்கு 134 ரன்கள் என்ற எளிதான இலக்கை இலங்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.