
அகமதாபாத், டிச. 20- இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்து தொடரை 3 – 1 என இழந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தொடர்நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டது தவறு என்கிற ரீதியில் பேசியுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு ‘தொடர் நாயகன்’ விருது வழங்கப்பட்டது. ஆனால், எதிரணி பயிற்சியாளரோ வேறு ஒரு கணக்கை போட்டு இருக்கிறார். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுக்ரி கான்ராட், “நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். பும்ரா சிறந்த பவுலர் தான், அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான உண்மையான வித்தியாசம் ஹர்திக் பாண்டியா தான். இன்றைய போட்டியில் அவர் ஆடிய அந்த இன்னிங்ஸ் தான் எங்களை தோற்கடித்தது. முதல் போட்டியிலும் அவர் எங்களை சிக்கலில் மாட்ட வைத்தார். அவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று நினைத்தேன். அவருக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று கூறினார்.




















