
தென்காசி: நவம்பர் 10-
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட தென்காசி தொழிலாளர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராணுவ ஆட்சி நடைபெறும் மாலியில், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள கோப்ரி நகரில் தனியார் மின்சார நிறுவனத்தில் வேலைபார்த்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்திச் சென்றனர்.அவர்களை மீட்பதற்கான முயற்சியில் அங்குள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு கருதி கோப்ரியில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தலைநகர் பமாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட 5 பேரில் இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (36), புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) என்று கூறப்படுகிறது. இவர்களை உடனடியாக மீட்டுத் தர பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















