Home மாவட்டங்கள் பெங்களூர் நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் தர்ஷனுக்கு ஒரு ஆண்டுக்கு ஜாமீன் இல்லை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: மே 15-
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் விசாரணை நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தர்ஷனின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், இன்னும் ஓராண்டு சிறையிலேயே இருக்க வேண்டிய நிலையை உறுதி செய்துள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் தர்ஷன், தனது உடல்நலக் குறைவு, சிறையில் போதிய வசதிகள் இல்லாமை மற்றும் சாட்சிகள் விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஜாமீன் கோரியிருந்தார். தர்ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “மொத்தம் 272 சாட்சிகளில் இதுவரை 10 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வேகம் தொடர்ந்தால் விசாரணை முடிவடைய நீண்ட காலமாகும்,” என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ஆதாரங்களைச் சிதைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு
ஜாமீன் நிராகரிப்பு தற்சமயம் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஓராண்டு காலக்கெடு அடுத்த ஓராண்டுக்குள் குறைந்தது 60 முக்கிய சாட்சிகளிடம் விசாரணையை முடிக்க வேண்டும்.
மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: ஓராண்டுக்குப் பிறகும் விசாரணை முடிவடையவில்லை என்றால், தர்ஷன் மீண்டும் விசாரணை நீதிமன்றத்திலேயே ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே அடிப்படை வசதிகள் தர்ஷனுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், அவரைத் தனி அறையில் வைப்பது தொடர்பாக நீதிமன்றம் எந்தத் தலையீடும் செய்யாது.
இந்த உத்தரவின் மூலம், நடிகர் தர்ஷன் இன்னும் ஓராண்டு காலம் சிறைவாசத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.