நடிகை சிவஜோதியை திருப்பதியில்அனுமதிக்க மாட்டோம்! தேவஸ்தானம் அதிரடி

திருப்பதி, நவ. 28- நடிகை சிவஜோதியை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில டிவி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் சிவஜோதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது ரூ 10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கினார். எனினும் தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிவஜோதியும் அவரது சகோதரர் சோனுவும், இன்ஸ்டாகிராமில்,” நாங்கள் 10 ஆயிரம் ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கியும் சுவாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருந்தோம். பிரசாதம் வாங்க நீண்ட நேரம் பிச்சைக்காரர்களை போல் காத்திருந்தோம் என வீடியோ எடுத்து போட்டிருந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திருப்பதி தேவஸ்தானத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் சிவஜோதியின் ஆதார் கார்டை இனி திருப்பதி தேவஸ்தானத்தில் பதிவு செய்வதை தவிர்க்கும் வகையில் அந்த நம்பரை பிளாக் செய்துள்ளனர். இனி வருங்காலங்களிலும் சிவஜோதி, ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவஜோதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தெரிந்து தெரியாமலோ என் வாயில் இருந்து வார்த்தைகள் தவறுதலாக வந்துவிட்டன. எனது வீட்டில் ஏழுமலையான் படம் உள்ளது. ஏழுமலையானை குலதெய்வமாக வழிபடுகிறோம். என் வயிற்றில் வளரும் குழந்தையை கூட ஏழுமலையானாக நான் கருதுகிறேன். Powered By 4 எங்கள் குடும்பத்தில் அனைவரும் அனைத்து கடவுள்களையும் வணங்கி வருகிறோம். என் மீதான தவறுக்கு மன்னித்துவிடுங்கள்” என பதிவு செய்திருந்தார். இவர் கன்னட பிக்பாஸில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.