
சென்னை: டிசம்பர் 19-
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள், திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி, தங்கள் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி செய்து, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு முடித்த செயலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாலை 6 மணி ஆனதை தொடர்ந்து செவிலியர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் அருகே பேருந்தில் அழைத்து சென்று விடுவித்தனர்.















