
புதுடெல்லி: டிசம்பர் 2-
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது.
இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நாட்டின் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் ரூ.1,70,276 கோடியாக இருந்தது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஜிஎஸ்டி வசூல் வெறும் 0.7% மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி குறைப்பே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், நடப்பாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1.87 லட்சம் கோடியிலிருந்து 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.95 லட்சம் கோடியைத் தொட்டது. 2025ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வசூலானது 8.9 சதவீதம் உயர்ந்து ரூ.14,75,488 கோடியாக அதிகரித்துள்ளது.
நிகர அளவிலான ஜிஎஸ்டி வருவாய் நவம்பரில் 1.3 சதவீதம் உயர்ந்து ரூ.1,52,079 கோடியாக உள்ளது. வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட மொத்த ரீபண்ட் 4 சதவீதம் குறைந்து ரூ.18,196 கோடியாக இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















