
டெல்லி: டிசம்பர் 1-
இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த பிரதமர் மோடி, அமளிகளை எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாடாளுமன்றம் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்ற அவர், குளிர்கால கூட்டத்தொடர் வெறும் சடங்கு அல்ல என்றும் இந்திய ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இது வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் குறித்து பேசிய அவர், பீகார் தேர்தல் முடிவுகள் குறித்தும் பேசினார். பீகார் தேர்தல் முடிவுகளின் சோகத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும் என்றும் பீகார் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்து பிரச்சினை எழுப்பக்கூடாது என அவர் தெரிவித்தார். மக்களின் பிரச்சனைகள் குறித்தே எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் டிராமா வேண்டாம் என்றும் அமளிகளை நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.















