நாடு முழுதும் டிஜிட்டல் கைது வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்!

புதுடில்லி, டிச. 2- நாடு முழுதும், ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன. போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், ‘மொபைல் போன் வீடியோ’ அழைப்பு மூலம், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. ஹரியானாவைச் சேர்ந்த வயதான தம்பதி அளித்த புகாரின்படி, டிஜிட்டல் கைது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜெய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்படுகிறது.