நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எது தெரியுமா

டெல்லி: செப். 22 – இந்திய மாநிலங்களின் பொதுக்கடன்கள் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ₹17.57 லட்சம் கோடியாக இருந்த இந்தக் கடன், 2022-23 நிதியாண்டில் ₹59.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எந்த மாநிலங்கள் அதிகக் கடன்களைக் கொண்டிருக்கின்றன.. எந்த மாநிலங்கள் குறைந்த கடன்களைக் கொண்டுள்ளன? இந்த லிஸ்டில் தமிழ்நாடு எங்கே என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தொடர்ச்சியாகப் பல்வேறு விஷயங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது நமது நாட்டில் உள்ள மாநிலங்களின் நிதிநிலை தொடர்பான முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. மாநில நிதிச் செயலாளர்கள் மாநாட்டில் இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. இது தொடர்பான தகவல்களைப் பிரபல ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் 28 மாநிலங்களின் மொத்தப் பொதுக்கடன், 2022-23 நிதியாண்டின் இறுதியில் ₹59,60,428 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 22.96 சதவீதமாகும். 2013-14 நிதியாண்டில் மாநிலங்களின் பொதுக்கடன் ₹17,57,642 கோடியாக இருந்த நிலையில், இப்போது அது ரூ.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.