
புதுடில்லி, டிச. 22- ‘’தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை, ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் அதிகாரமற்றவர்’’ என வங்கதேச வன்முறை குறித்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அளித்த பேட்டி: வங்கதேசத்தில் இந்தியா மீதான விரோதம் பயங்கரவாதிகளால் வளர்க்கப்படுகிறது; என் குடும்பத்தை தாக்கியவர்கள் தான் இந்திய தூதரகத்தை தாக்குகின்றனர். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் பயங்கரவாதம் பெருகியுள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளை எதிர்க்காமல் ஆதரிக்கின்றனர். வன்முறையை தடுக்க அந்த அரசுக்கு சக்தி கிடையாது. நாட்டிற்குள் சட்டம் ஒழுங்கு இல்லாததால்,வங்கதேசத்தின் மீதான நம்பகத்தன்மை சர்வதேச அரங்கில் சரிந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அண்டை நாடுகளுடனான உறவுகளையும் சீர்குலைக்கின்றன.
முகமது யூனுஸ் பயங்கரவாதிகளை அமைச்சரவை பதவிகளில் அமர்த்தியுள்ளார், தண்டனை பெற்ற பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை ஆதரிக்கிறார். தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை, ஏனெனில் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. வங்கதேசத்தில் வன்முறை நடப்பது வழக்கமாகிவிட்டது. முகமது யூனுஸ் அதிகாரமற்றவர். அவர் தலைமையிலான அரசின் கீழ், வங்கதேசம் குழப்பத்தில் மூழ்கி வருகிறது. கட்டுப்படுத்தப்படாத வன்முறை, அதிகரித்து வரும் பயங்கரவாதம் இந்தியா உடனான உறவுகள் மோசமடைந்து வருகிறது. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.
















