
வாஷிங்டன்: ஜனவரி 12-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் ஞாயிற்றுக்கிழமை ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் தன்னை “வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்” (Acting President of Venezuela) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் விக்கிபீடியா பக்கத்தின் லேஅவுட் போலவே இருந்த காரணத்தால் பலரும், டிரம்ப்-ன் விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று செக் செய்தனர், ஆனால் இப்படி எவ்விதமான மாற்றம் அதில் இல்லை. இதனால் டிரம்ப் திட்டமிட்டு இப்படியொரு புகைப்படத்தை உருவாக்கி பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவில் டிரம்ப்-ன் புகைப்படத்துடன் வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராக “ஜனவரி 2026 முதல் பதவியில் இருப்பதாக ” தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கீழ் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்-ன் இந்த பதிவு உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது அமெரிக்காவின் தாக்குதல் இஸ்ரேல் – காசா போர் முடிந்து புதிய வருடத்தை அமைதியாக துவங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுலா மீது பெரிய அளவிலான ராணுவ தாக்குதலை மேற்கொண்டு மீண்டும் பதற்ற நிலையை கொடுத்தது. பல நாட்கள் ஆய்வு செய்து, கண்காணித்து திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இந்த தாக்குதல் மூலம் வெனிசுலா நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இருவரும் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, போதைப்பொருள் பயங்கரவாத சதி குற்றச்சாட்டுகள் உட்பட 4 முக்கிய குற்றங்களுக்கு கீழ் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை வெனிசுலா அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் திட்டம் நிகோலஸ் கைதுக்கு பின்பு டிரம்ப், வெனிசுலாவை பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான தலைமை மாற்றம் உருவாகும் வரையில் அமெரிக்கா நிர்வகிக்கும் என்று கூறியுள்ளார். வெனிசுலா மக்களின் நலனில் அக்கறை கொள்ளாதவர்கள் ஆட்சிக்கு வராமல் தடுக்க இது அவசியம் என்று அவர் விளக்கினார்.
இது மட்டும் அல்லாமல் வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் வளத்தை மொத்தமாக கைப்பற்றிய அமெரிக்கா, தற்போது அந்நாட்டை நிர்வாகம் செய்ய 3 பேர் கொண்டு குழு டிரம்ப் நியமித்துள்ளார். இந்த குழு வெனிசுலாவை நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையை முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும். முதல் கட்டமாக வெனிசுலாவில் இருந்து 30 முதல் 50 மில்லியன் பேரல் உயர்தர எண்ணெயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த எண்ணெய் சந்தை விலையில் வாங்கப்பட்டு, அதற்கான தொகையை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும் எனவும் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவில் புதிய தற்காலிக அதிபர் இந்த நிலையில் நிகோலஸ் மடூரோ கைது செய்யப்பட்ட பிறகு, வெனிசுலாவின் துணை அதிபர் மற்றும் எண்ணெய் அமைச்சர் டெல்சி ரோட்ரிகஸ் கடந்த வாரம் தற்காலிக அதிபராக பதவியேற்றார். ஆயினும் டிரம்ப் தனது பதிவில் தான் வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர் என்று அறிவித்துள்ளார். இதனால் டெல்சி ரோட்ரிகஸ் அதிகாரம், பதவியின் நிலை என்ன..? இதோடு இனி நிகோலஸ் மதுரோ வெனிசுலாவுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் டிரம்ப் அடுத்தடுத்து கியூபா, மெக்சிகோ, கிரீன்லாந்து ஆகிய நாடுகளை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் உலகளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. முதலில் டிரம்ப் கச்சா எண்ணெய் வளத்தை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தற்போது நாட்டையே கைப்பற்றுகிறார்.















