
சென்னை: ஜூன் 9-
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.
உலகப் புகழ்பெற்ற நார்வே செஸ்தொடர் – 2026, ஆஸ்லோவில் சமீபத்தில் நடைபெற்றது. இதன் கடைசி மற்றும் 10-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ம் தேதி
இரவு நடைபெற்றன. இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். இதில், 45-வது நகர்த்தலின்போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
6 வீரர்கள் கலந்துகொண்ட இந்த தொடரில் உலகின் முதல்நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்திஇருந்தார். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பிரக்ஞானந்தா நேற்று சந்தித்தார். நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயரிய ஊக்கத் தொகை ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கிப் பாராட்டினார். தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரக்ஞானந்தாவின் பெற்றோர் ரமேஷ்பாபு – நாகலட்சுமி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
பிறகு, செய்தியாளர்களிடம் பிரக்ஞானந்தா கூறியதாவது: நார்வே செஸ் தொடரில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் விஜய் என்னைப் பாராட்டினார். இதேபோல, தொடர்ந்து வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பேன். விளையாட்டுவீரர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


















