
சென்னை: ஜனவரி 23- புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பூங்கா நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா 24.10.2025 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகள்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது ஓர் அமர்விற்கு 250 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் 365 நாள்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்விக்காக கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவ, மாணவியர் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை 9:30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் தவிர) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. சீரமைப்பிற்குப் பிறகு நடைப்பயிற்சிக்காக அனுமதி பெற்றவர்கள் நீங்கலாக 24.10.2025 முதல் இன்றுவரை 6,843 மாணவ, மாணவியரும் 20,233 பொதுமக்களும் பூங்காவைப் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர்.















