
வதோதரா, ஜன. 12- நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன்கள் இலக்கை இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி நிலைத்து நின்று விளையாடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 60 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 16-வது அரை சதத்தை கடந்தார். மறுபுறம் டெவன் கான்வே 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவர்களில் 117 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஹர்ஷித் ராணா பிரித்தார். சிறப்பாக விளையாடி வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 69 பந்துகளில், 62 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா வீசிய வைடு யார்க்கர் பந்தை அடித்த போது மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனது. ஹர்ஷித் ராணா தனது அடுத்த ஓவரில் டெவன் கான்வேவை போல்டாக்கினார். டெவன் கான்வே 67 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய வில் யங் 12 ரன்களில் மொகமது சிராஜ் பந்திலும்,
கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் குல்தீப் யாதவ் பந்திலும் நடையை கட்டினர்.நடுவரிசையில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதிலும் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிட்செல் ஹே 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16, ஜாக் ஃபோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினர். தனது 12-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்செல் 71 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இறுதிக்கட்ட ஓவர்களில் கிறிஸ்டியன் கிளார்க் 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன 24 ரன்களும், கைல் ஜேமிசன் 8 ரன்களும் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மொகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 301 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற மைக்கேல் பிரேஸ்வெலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி 8.4 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்தது.


















