நியூஸி: சூப்பர் 8 ஆட்டத்தில் அபார வெற்றி!

கொழும்பு, பிப். 26- நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸிலாந்து அணி. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 61 ரன்களில் வீழ்த்தியது.புதன்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் 8 குரூப்-2 ஆட்டத்தில் இலங்கையும், நியூஸிலாந்தும் விளையாடின. இந்த சுற்றில் இங்கிலாந்து உடனான முதல் ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது. மழை காரணமாக பாகிஸ்தான் உடன் நியூஸிலாந்து விளையாட இருந்த ஆட்டம் ரத்தானது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. நியூஸிலாந்து அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் கட்டுப்பாடு முழுவதும் இலங்கை வசம் இருந்தது. அந்த சூழலில் பேட்டை சுழற்றினார் நியூஸிலாந்து கேப்டன் சான்ட்னர். அதுவரை 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த அவர், இன்னிங்ஸில் வேகத்தை கூட்டினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சான்ட்னர், 26 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கோல், 23 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. முதல் பந்தில் போல்ட் ஆனார் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸங்கா. தொடர்ந்து அசலங்கா, குசல் மெண்டிஸ், பவன் ரத்னநாயகே, கேப்டன் ஷனகா, ஹேமந்தா, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே ஆகியோர் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது இலங்கை. இதன் மூலம் 61 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.