நீதித்துறையில் ஊழல் புத்தகம் தடை

புதுடெல்லி: பிப்ரவரி 26-
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​ட 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை ‘ஊழல்’ குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மன்னிப்பு கோரியது.
இந்த வழக்கில் இன்று (பிப்.26) ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘பாடப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றது குறித்த தகவல் வெளியானதும் அதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, உடனடியாக செயல்பட்டுள்ளது.
அந்தப் புத்தகத்தில் அந்த அத்தியாயம் இடம்பெறக் காரணமாக இருந்த இரண்டு நபர்களும் இந்த அமைச்சகத்தின் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். வேறு எந்த அமைச்சகத்திலும்கூட அவர்களுக்கு பங்கு இருக்காது. நீதிமன்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கவில்லை’’ என தெரிவித்தார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் ஆழமான விசாரணையை நடத்த விரும்புகிறோம். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில், இதற்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பது எனது கடமை. தலைகள் உருள வேண்டும்(காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்). சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை இந்த வழக்கை நான் முடிக்க மாட்டேன். இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்’’ என தெரிவித்தார்.
மேலும் அவர், ‘‘நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது குறைமதிப்புக்கு உட்படுத்தவோ உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நீதித்தறை ஊழல் நிறைந்தது என்று நீங்கள் முழு ஆசிரியர் சமூகத்துக்கும் மாணவர் சமூகத்துக்கும் கற்பித்தால் அது எத்தகைய செய்தியை வழங்கும். ஆசிரியர்கள் அதைக் கற்றுக்கொள்வார்கள். மாணவர்களும் அதை கற்றுக்கொள்வார்கள்.
வெளியிடப்பட்ட அந்த புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதாக அரசாங்கம் தரப்பில் கூறினாலும், அது தொடர்ந்து பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களிலும் உள்ளது. இதனால், இன்று நீதித்துறை ரத்தம் சிந்துகிறது. புத்தகத்தின் அனைத்து நகல்களையும் அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தை எழுப்பிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘நீதித்துறை குறித்த அத்தியாயத்தின் PDF பதிப்பு ஏற்கனவே பரவலாக உள்ளது. புத்தகத்தைவிட இது அதிக அளவில் பரவி வருகிறது’’ என தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, ‘‘இந்த அத்தியாயத்தின் PDF ஆன்லைனில் தொடர்ந்து பரவி வருகிறது. அரசாங்கம் இதை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் தளத்தில் உள்ளவற்றை நீக்க அரசாங்கம் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இந்த அத்தியாயம் சட்ட உதவி அல்லது நீதிக்கான அணுகலைப் பற்றி பேசவில்லை. மாறாக, பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசுகிறது’’ என குறிப்பிட்டார். ‘‘நீதித்துறை தொடர்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அத்தியாயம் பொறப்பற்றது. நீதித்துறையை அவமதிக்கக்கூடியது. இதை உணராமல் NCERT கவுன்சில் இயக்குநர் அதை ஆதரித்தார். நீதித்துறையின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கும், குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது. இதை சரி செய்யாவிட்டால், நீதித்துறை மீதான பொதுமக்களின் குறிப்பாக மாணவர்களின் நம்பிக்கை சிதையக்கூடும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னணி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்டி), அண்​மை​யில் வெளி​யிட்​டுள்ள 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் நீதித்​துறை குறித்த பாட​மும் இடம்பெற்​றுள்​ளது. அந்த பாடத்​தில், நீதித்​துறை அமைப்​புக்​குள் உள்ள ஊழலை​யும், குறிப்​பாக பொருளா​தார ரீதியாக நலிவடைந்த பிரி​வினருக்கு நீதி கிடைப்​ப​தில் அதன் தாக்கம் குறித்​தும் விவா​திக்​கிறது. அதில், உச்ச நீதி​மன்​றத்​தில் மட்​டும் 81 ஆயிரம் வழக்​கு​கள் தேங்கியிருப்​ப​தாக​வும், உயர் நீதிமன்​றங்​களில் 62.40 லட்​சம் வழக்கு​கள் நிலு​வை​யில் இருப்பதாக​வும், மாவட்​டம் மற்​றும் சார்பு நீதி​மன்​றங்​களில் மொத்தம் 4.70 கோடி வழக்​கு​கள் தேங்கி இருப்பதாக​வும் சுட்டிக்காட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், இந்​தப் பாடத்​தில் நீதித்​துறை​யின் பல்​வேறு மட்​டங்​களில் மக்​கள் ஊழலை எதிர்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. ஏழைகள் மற்​றும் சமூகத்​தில் பின்​தங்​கிய​வர்​களுக்​கு, இது நீதியை அணுகு​வ​தில் உள்ள சிக்​கலை மோச​மாக்கி வரு​கிறது. எனவே, தொழில் ​நுட்பத்தைப் பயன்​படுத்​து​வதன் மூலம் நீதித்​துறை அமைப்​பில் நம்​பிக்​கையை வளர்க்​க​வும் வெளிப்​ படைத்​தன்​மையை அதிகரிக்​க​வும், ஊழல் சம்​பவங்​கள் எங்கு எழுந்​தா​லும் அவற்றை எதிர்த்து விரை​வான மற்​றும் தீர்க்​க​மான நடவடிக்கை எடுக்​க​வும் மாநில மற்​றும் யூனியன் பிரதேச நிலை​யில் தொடர்ந்து முயற்சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக​வும் என்​சிஇஆர்டி பாடத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.