
சென்னை: ஆக. 31:
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கிய தமிழர்களில் 7 பேர் குரோம்பேட்டையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி சந்தித்து ஆறுதல் கூறினர்.
நேபாளின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்திலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 57 பேரில் 21 பேர் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால், தனியார் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சென்ற 49 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை. இதனால், அவர்களது உறவினர்கள் ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் வெங்கட் ரமணன் கூறுகையில், “நேபாளத்தில் உள்ள தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களை விரைவில் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சிலர் நேபாளம் சென்றுள்ளனர். மத்திய அரசின் மூலம், அவர்களை விரைவாகக் கண்டுபிடிக்கும் பணியும் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்புடன் உள்ளனர். காணாமல் போன 49 பேர் உட்பட 100 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது,” என்றார்.













