
பெங்களூர், ஜூலை 2- உடல் பருமனாக இருப்பதால் கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அழகான மணவாழ்க்கை அமையும் என்று கனவு கண்ட அந்தப் பெண்ணுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே மரணம் பரிசாகக் கிடைத்துள்ளது. “நீ குண்டாக இருக்கிறாய்” என்று உருவக் கேலி செய்தும், வரதட்சிணை கேட்டும் தாலி கட்டிய கணவனே மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா கமலாகர் (29). செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், பசவராஜ் வத்தர் என்பவருக்கும் கடந்த 2024 டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்களிலேயே பிரியங்காவின் வாழ்க்கை நரகமாக மாறத் தொடங்கியது. பசவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. “நீ என்னை விட குண்டாக இருக்கிறாய்”, “உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது” என பசவராஜ் அடிக்கடி பிரியங்காவை உருவக் கேலி (Body Shaming) செய்தாராம். இதுமட்டுமின்றி, பிரியங்காவின் வீட்டிலிருந்து கூடுதல் பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்துள்ளனர். பிரியங்காவின் உறவினர்கள் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு பிரியங்கா இரண்டு முறை கருவுற்றதாகவும், ஆனால் கணவன் பசவராஜ் அவரைத் தொடர்ந்து தாக்கியதால் இரண்டு முறையும் கருக்கலைப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.


















