
பெலகாவி: ஏப்ரல் 23-
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாபுராவை அடுத்துள்ள நந்தகடா கிராமத்தில், நைட்டி அணிந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்குக் கணவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணாஜி பாட்டில் மற்றும் மஞ்சுளா பாட்டில் தம்பதியினருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா வீட்டில் சேலை அணிவதற்குப் பதிலாக ‘நைட்டி’ அணிவதை கிருஷ்ணாஜி தொடர்ந்து எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாகத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிருஷ்ணாஜி தனது மனைவி மஞ்சுளா மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்தத் தீ விபத்தில் மஞ்சுளாவுக்கு 80% பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் பெலகாவியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தற்போது கோவாவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நந்தகடா காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக முயன்ற கணவன் கிருஷ்ணாஜியைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















