
மும்பை: பிப்ரவரி 20-
இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்தியச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது உலக முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சந்தை ஏற்றம் கண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்களுக்குக் கிடைத்த லாபத்தை உறுதி செய்வதற்காகப் பங்குகளை விற்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இந்த விற்பனை வேகம் எடுத்தவுடன், தொழில்நுட்ப ரீதியாக சந்தை முக்கிய நிலைகளைத் தாண்டி அதன் குறியீடு கீழே இறங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,236.11 புள்ளிகள் சரிந்து 82,498.14 என்ற அளவில் நிலைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,454.35 – ல் நிலைகொண்டது. இது தற்காலிகச் சரிவு என்பதைத் தாண்டி, சந்தையில் நிலவும் ஒரு வித அச்சத்தை வெளிப்படுத்துவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.472 லட்சம் கோடியில் இருந்து ரூ.464 லட்சம் கோடியானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.















