
புதுடெல்லி, ஏப்ரல் 25- ஐபிஎல் தொடரில் இன்று பிற்கல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. டெல்லியின் மிகப்பெரிய கவலையே அவர்களின் சீரற்ற பேட்டிங் தான். கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி ஆகியோர் அவ்வப்போது தங்களின் பங்களிப்பை அளித்தாலும், ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட அந்த அணி தவறி உள்ளது. தொடக்க வீரரான நிசங்காவின் ஆட்டம் டெல்லி அணிக்கு பலவீனமாக மாறியுள்ளது. ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற அவர் தவறிவிடுகிறார். இதனால் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் நிசங்கா விக்கெட்டை இழப்பது அல்லது ரன் வேகத்தை உயர்த்தத் தவறுவது, பின்வரிசையில் வரும் வீரர்களை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளுகிறது. இதுஒரு புறம் இருக்க கேப்டன் அக்சர் படேல் கடந்த போட்டியில் களத்தில் கையாண்ட சில உத்திகள் சார்ந்த கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மாவிற்கு எதிராக, அக்சர் படேல் பகுதிநேர ஆஃப்-ஸ்பின்னரான நிதிஷ் ராணாவையே தொடர்ந்து பந்துவீச வைத்தார். ஆனால், ராணாவால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதே சமயம் குல்தீப் யாதவ் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாளவில்லை. டெல்லி அணியின் இந்தச் செயல்பாடு நெருக்கடியான நேரங்களில் அவர்களிடம் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை என்பதையும், சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மையும் அவர்களிடம் குறைவாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பேட்டிங் வரிசையை விட பந்துவீச்சுப் பிரிவு சற்று சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், எதிரணி வீரர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தேவையான ஆக்ரோஷமும் துல்லியமும் அவர்களிடம் குறைவாகவே உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.





















