பஞ்சாப் வெள்ளம்.. கதறும் மக்கள்.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பகவந்த் மான்

சண்டிகர்: செப். 3-
பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதார். ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 1,300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.6,582 பேர் 122 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்