பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்

நியூயார்க்:ஜன.15- பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கான உத்தரவை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவின் அண்டை நாடாக இருப்பது கியூபா. கம்யூனிச நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் நல்லுறவு கிடையாது. கியூபா மீது 60 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசுகள் விதித்து அமல் செய்து வருகின்றன.
இந்நிலையில் டிரம்ப் ஏற்கனவே அதிபராக இருந்தபோது, கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.ஈரான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் கியூபாவும் பயங்கரவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு கியூபா மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்க நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.இந்நிலையில் பதவிக்காலம் முடிய போகும் அதிபர் பைடன், அந்த பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனினும் புதிதாக பதவி ஏற்கப் போகும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் இதை ஏற்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன. கியூபா எதிர்ப்பாளர்கள் நிரம்பி இருக்கும் டிரம்ப் நிர்வாகம், மீண்டும் பழையபடி பயங்கரவாத ஆதரவு பட்டியலில் கியூபாவை சேர்க்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அமெரிக்க அரசியல் நிபுணர்கள்.