பதற்றத்துக்கு நடுவே மணிப்பூர் செல்லும் மோடி

இம்பால், செப். 13- மணிப்பூரில் குக்கி – மைத்தேயி மக்களிடையே கடந்த 2023ம் ஆண்டில் மோதல் ஏற்பட்டு வன்முறை நடந்தது. இந்த வன்முறை ஓராண்டுக்கு மோலாக தொடர்ந்த நிலையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் வன்முறைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் சென்று ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்கார வளைவு, கட்அவுட் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக பைரன் சிங் இருந்தார். இதற்கிடையே தான் கடந்த 202ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையானது. மாநிலமே பற்றி எரிந்தது. 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் பலியானார்கள். 250க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலரும் வீடுகளை இழந்தனர். இதையடுத்து பைரன் சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஆட்சி மணிப்பூரில் நடந்து வருகிறது. மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்நிலையில் தான் வன்முறைக்கு பிறகு பிரதமர் மோடி இன்று முதல் முறையாக மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமர் மோடி இன்று முதல் வரும் 15 நாட்கள் வரை மணிப்பூர், மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.