
சென்னை: பிப்ரவரி 25-
கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் ரயில் சேவை மாற்றத்தால், கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மேலும் 45 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைரத்து மற்றும் சேவைகள் மாற்றி அறிவிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, எழும்பூர் ரயில் நிலைய 5, 6-வது நடைமேடைகள் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நடைமேடைகள் மாற்றப்பட்டதால், இருமார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன.
இதனால் கடந்த 4 நாட்களாகவே பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்று 5-வது நாளாக ஏற்பட்ட மின்சார ரயில்கள் தாமதத்தால் பெரும்பாலான பயணிகள் திரிசூலம், பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இறங்கி, அருகில் உள்ள மெட்ரோ நிலையம் சென்று, மெட்ரோ ரயில்களில் பயணித்தனர்.
இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில், புறநகர் மின்சார ரயில் சேவை இரு மார்க்கத்திலும் நேற்று மேலும் 45 சேவைகளைக் குறைத்து இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்தது.இருப்பினும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, சென்னை எழும்பூர் – பரங்கிமலை மற்றும் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு இடையே 26 கூடுதல் மின்சார ரயில் சேவைகள் (மின்சார ரயில் ஷட்டில் சேவைகள்) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் செல்லும் போது இரு மார்க்கத்திலும் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய நிலையங்களில் நிற்காது.கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்கள் வார நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூர் – அரக்கோணம், கடற்கரை – அரக்கோணம் விரைவு மின்சார ரயில்கள், செங்கல்பட்டு – கடற்கரை பகுதி விரைவு மின்சார ரயில்கள் பரங்கிமலையில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















