
வாராணசி, டிச. 9- காசி நகரின் கட்டமைப்பை மேம்படுத்த, சாலையில் பறக்கும் ரோப் கார் உட்பட பல்வேறு திட்டங்கள் ரூ.60,000 கோடியில் நடைபெற்று வருவதாக வாராணசி மண்டல ஆணையர் சு.ராஜலிங்கம் தெரிவித்தார். ஆன்மிகத்தின் தலைநகரமான காசி, தற்போது நவீன கட்டமைப்புகளுடன் பிரம்மாண்டமான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. குறுகிய சந்துகளும், நெரிசலான சாலைகளும் மட்டுமே காசியின் அடையாளமாக இருந்த நிலை மாறி, இன்று சர்வதேச தரத்திலான சாலைகள், பாலங்கள், நதிவழிக் கப்பல் போக்குவரத்து என பெரும் மாற்றத்தை வாராணசி கண்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வாராணசி மண்டல ஆணையரும், தமிழருமான சு.ராஜலிங்கம் நம்மிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி காசி நகரத்தில் அதன் பழமை மாறாமல் உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டோம். இதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் ஒரு விரிவான போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டது. இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இங்கு முன்பு வெளிவட்டச் சாலைகள் (ரிங் ரோடு) இல்லாததால் அதிகபட்சம் 7 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வர 3 மணி நேரமாகும். ஆனால், தற்போது புதிய ‘ரிங் ரோடு’ மற்றும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் காரணமாக பயண நேரம் 40 நிமிடங்களாகக் குறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் 6 வழிச்சாலையாக ‘ரிங் ரோடு’ அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நகருக்குள் வரும் அனைத்துச் சாலைகளும் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், வாராணசியில் இருந்து தற்போது 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பயணிகளை கையாளும் விதமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், முன்பு ஒரு நாளைக்கு 10 விமானங்கள் மட்டுமே வந்து சென்ற வாராணசி விமான நிலையத்தில், தற்போது 52 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு கப்பல் போக்குவரத்து: கங்கை நதியை வெறும் வழிபாட்டுக்கு மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமநகரில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்காக ஒரு சிறிய துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.


















